ரேசன் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால், பட்டினி கிடந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதீஹ் மாவட்டத்தில் உள்ளது தும்ரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சாவித்ரி தேவி (வயது 58), அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் ரேசன் அட்டை கோரி பலமுறை விண்ணப்பித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் ரேசன் அட்டை வழங்குவதில் சாவித்ரி தேவி உட்பட பலருக்கும் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அக்கம்பக்கத்தினரிடம் வாங்கிய உணவுப் பொருட்களை பயன்படுத்தி வந்த சாவித்ரி தேவி, மூன்று தினங்களாக உணவு இன்றி பட்டினியில் கிடந்துள்ளார். இதனால், அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பட்டினிதான் காரணம் என கிரிதீஹ் மாவட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிசெய்துள்ளார். பட்டினியால் ஒருவர் மரணம் அடைவது நாட்டுக்கே ஏற்பட்டுள்ள இழுக்கு எனவும் அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.