மேற்கு வங்கம் மாநிலத்தில் பொதுவெளியில் ஒரு பெண்ணையும், ஆணையும் கட்டி வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருவதால், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் நடந்துள்ளது. வீடியோவில், ஒரு ஆணையும், பெண்னையும் மூங்கில் கம்பால் சரமாரியாக ஒருவர் தாக்குகிறார். அதனைப் பொதுமக்கள் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துகொண்டும், செல்போனில் படம் பிடித்துக்கொண்டு உள்ளனர். அடி தாங்க முடியாமல் பெண் நிலைகுலைந்து போயுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இருவர் மீதும் தாக்குதல் நடத்தியவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாஜேமுல் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலா செயலாளர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தாக்கப்படும் ஆணும், பெண்ணும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், கட்டபஞ்சாயத்து அடிப்படையில் இருவருக்கும் பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த இஸ்லாம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாஜேமுல் சோப்ரா தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹமிதுர் ரஹ்மானுக்கு நொருக்கமானவர் என்று குற்றம் சாட்டிய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா, “மம்தா தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பெண்களின் சாபக்கேடு. தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.