மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மூன்று கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஏற்கனவே 180 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில் 114 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எஞ்சியுள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் உள்ள 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (22/04/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக 1,071 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும், எட்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாக உள்ளது.