இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், அதன் பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. ஆனால் அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி, தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் உள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுடன் காணொளி வாயிலாக உரையற்றினார்.
இந்தக் கலந்துரையாடலில் பேசிய மோடி, "இந்த வைரஸ் நம்மிடமிருந்து நிறைய மக்களைப் பறித்துவிட்டது. அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார். இதைக் கூறும்போது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும் என்றதோடு, "கரோனாவிற்கெதிரான நமது தற்போதைய போரில், கருப்பு பூஞ்சை என்ற சவால் தோன்றியுள்ளது. அதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.