தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். வெளியான தேர்வு முடிவுகளின் படி, தமிழ்நாட்டில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 மாணவிகளும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர்கள் சிலரால், சாதிய காரணத்தால் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை இருவரும் கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்போது அந்த மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்திருந்தார். இந்தத் தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியியல் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். அதே போன்று தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஒரே திருநங்கை சென்னையைச் சேர்ந்த நிவேதா (வயது 20) 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் இவர் மருத்துவம் படிக்க விரும்புவதாகவும், இதற்காக நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை மாணவி நிவேதா ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து நிவேதா பேசுகையில், “பொதுத் தேர்வில் திருநங்கைகள் பிரிவில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளேன். இதனால் என்னைப் போன்ற திருநங்களுக்கும், என் தாய் தந்தையருக்கும் எனக்கும் பாராட்டுகள் குவிகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரையும், கல்வித்துறை அமைச்சரையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன். உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சின்னதுரை பேசுகையில், “நான் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. வணிகவியல் (COMMERCE) படிப்பை முடித்துவிட்டு பட்டய கணக்கர் (C.A.) ஆக வேண்டும் என்பது எனது ஆசை. உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட சம்பவம் போன்று இனி நடக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.