Skip to main content

“வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற புதிய நோய் மாணவர்களிடம் உருவாகியுள்ளது” - துணை ஜனாதிபதி

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
Vice President says A new disease has emerged to study abroad

ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியில் கடந்த 19ஆம் தேதியன்று தனியார் கல்வி நிறுவனம், நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு பேசினார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், “குழந்தைகள் மத்தியில் மற்றொரு புதிய நோய் வந்துள்ளது. அது என்னவென்றால், வெளிநாடு செல்வது. குழந்தை உற்சாகமாக வெளிநாடு செல்ல விரும்புகிறது. ஒரு புதிய கனவைக் காண்கிறது. அங்கு சென்றவுடன் சொர்க்கம் கிடைக்கும் என்று உணர்கிறது. எந்த நிறுவனத்துக்குப் போகிறோம், எந்த நாட்டுக்குப் போகிறோம் என்று எந்த மதிப்பீடும் இல்லை. நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற குருட்டுப் பாதை மட்டுமே இருக்கிறது. 18 முதல் 25 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் விளம்பரங்களால் பாதிக்கப்படுகிறார்கள். 

2024ல் 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என மதிப்பிடப்பட்டு வருகிறது. அவர்கள் நமது அந்நிய செலாவணியில் 6 பில்லியன் டாலர் இழப்பை உருவாக்கியுள்ளனர். கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டால், நமது நிலை என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

இளைஞர்கள் பொதுவாக 8-10 வகையான வேலைகளுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் பல்வேறு துறைகளில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் பெரிதாகி வருகிறது. ஆனால் நமது பெரும்பாலான மாணவர்கள் அதை முழுமையாக பயன்படுத்துவதில்லை. வெளிநாட்டு நிலைமைகளைப் பற்றி மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவது கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும். சேர்க்கை பெறும் கல்வி நிறுவனத்தின் தரவரிசை என்ன, அதன் நிலை என்ன என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். இதனுடன் திறமையானவர்கள், சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற மிகப் பெரிய புரட்சிகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்” என்று கூறினார். 

துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரின் இந்த கருத்துகள் பேசுபொருளாகி வருகின்றன. மேலும், ஜக்தீப் தன்கரின் மகள் அமெரிக்காவில் உள்ள பீவர் கல்லூரியில் (இப்போது ஆர்காடியா யுனிவர்ஸ்டி) பட்டம் பெற்றார் என்பதையும், அவர் இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கோடைகால படிப்புகளைக் மேற்கொண்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 

சார்ந்த செய்திகள்