உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், நேற்று மாநில அமைச்சரவை கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கியத் திட்டங்களை அமலாக்குவது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்தார். இதில் முக்கியமாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, அதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது.
வாஜ்பாய் பெயரிலான புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் புறநகர் பகுதியில் அமைய உள்ளது. மேலும் இதற்காக 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யவும், முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு மாநில மருத்துவத்துறை சார்பில் 20 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும், மாநில மருத்துவக் கல்வித்துறையும், லக்னோ வளர்ச்சிக் கழகமும் சார்பில் தலா 15 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.