Skip to main content

“காங்கிரஸ் தோல்வியடையும் போதெல்லாம் இதைத்தான் பேசுவார்கள்” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Union Minister Anurag Thakur crcitized congress

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை பயணம்' 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) நடத்தப் போவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது, “பாரத் ஜோடோ யாத்ரா’வுக்கு பிறகு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ நடத்தப்படும். மணிப்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 6,200 கி.மீ. தூரம் கொண்ட இந்த நீண்ட பயணம் ஜனவரி 14 ஆம் தேதி முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு 14 மாநிலங்கள் வழியாகச் செல்லும்” என்று கூறினார். 

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 139வது ஆண்டையொட்டி இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாக்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி இன்று (29-12-23) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “2024 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 

பிரதமர் மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்வார். ஆனால், என்னுடைய கோரிக்கைக்குப் பிறகு, ஏழைகள் என்ற ஒரே சாதிதான் இந்தியாவில் இருக்கிறது என்று கூறுகிறார். ஒரே சாதி என்றால், உங்களை ஏன் பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்? நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சாதியினருக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவோம்” என்று கூறினார்.

இந்த நிலையில்,  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ராகுல் காந்தியின் நடைப்பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அனுராக் தாக்கூர், “காங்கிரஸ் தோல்வியடையும் போது அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசுவார்கள். ஆனால், அவர்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிகளைப் பற்றி பேசுவதில்லை. பா.ஜ.க நிறைய உழைத்தது. எங்கே அதிகம் வேலை பார்க்கிறீர்களோ அங்கு வாக்குகள் அதிகம் கிடைக்கும். இந்தியா கூட்டணியில், காங்கிரஸால் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க முடியாது. அவர்களில் பெரும்பாலான தலைவர்கள் ஊழலுக்காக சிறையில் இருக்கிறார்கள் அல்லது ஜாமீனில் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் மற்றவர்களுக்கு எப்படி நீதி வழங்க முடியும்” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்