இந்தியாவில் டெல்டா வகை கரோனாவால், இரண்டாம் அலை ஏற்பட்டது. தற்போது நாட்டில் இரண்டாவது அலை ஓய்ந்துவருகிறது. அதேநேரத்தில், டெல்டா வகை கரோனா, டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்து இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா ப்ளஸ் வகை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் நேற்று (22.06.2021) தெரிவித்திருந்த நிலையில், இன்று காலைவரை 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, டெல்டா ப்ளஸ் வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில், அது மேலும் பரவாமல் தடுக்க கட்டுப்பாட்டு மண்டலங்களை ஏற்படுத்துமாறும், கூட்டம் கூடுவதைத் தடுக்குமாறும் கேரளா, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் டெல்டா ப்ளஸ் வகை கரோனவைக் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ள அவர், டெல்டா ப்ளஸ் வகை கரோனாவின் மூன்று தன்மைகளையும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா ப்ளஸ் தன்மைகளாக அதிகரித்துள்ள பரவல் தன்மை, நுரையீரல் உயிரணுக்களின் ஏற்பிகளுடன் வலுவான பிணைப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். மோனோக்ளோனல் ஆன்டிபாடியின் செயல்திறன் குறைவதையும் டெல்டா ப்ளஸ் கரோனாவின் தன்மையாக மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மோனோக்ளோனல் ஆன்டிபாடி என்பது கரோனா சிகிச்சையில் பயன்படுத்தும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.