மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அந்த சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் 35- வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 40 விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (30/12/2020) மதியம் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6- ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் சார்பில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.