டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (24/02/2021) காலை நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் பரிந்துரை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முன்வரவில்லை என உள்துறைக்கு ஏற்கனவே தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்படும். பேரவை கலைக்கப்பட்டப் பின் மாநிலத்தை நிர்வகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வேறு ஏதேனும் நோய்கள் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கும் கரோனா தடுப்பூசி வழங்க விரைவில் அனுமதி அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குஜராத்திற்குச் சென்றுள்ள நிலையில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அவர் இன்று இரவு அல்லது நாளைக்குள் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததால், கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று தனது பதவி மற்றும் அமைச்சரவையை நாராயணசாமி ராஜினாமா செய்தார்.