உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது படைகளில் சிலவற்றைத் திரும்பப் பெற்றதாக வெளியான தகவல் இந்திய வர்த்தக சந்தையிலும் எதிரொலித்துள்ளது. போர் பதற்றத்தால் குறைந்த பங்குச் சந்தைகள் இன்று (15/02/2022) மாலை மீண்டும் ஏற்றம் கண்டன. அதேசமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையும் குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கக் கூடும் என்ற அச்சத்தால், சர்வதேச சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்திருந்தனர். சில படைகள் முகாம் திரும்புவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், சந்தைகள் மீண்டும் எழுச்சிக் கண்டுள்ளன. இந்தியாவில் பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகத்தின் இறுதியில் 1,736 புள்ளிகள் உயர்வு கண்டு 58,142 புள்ளிகளில் முடிவடைந்தது. 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 1- ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் கண்ட மிகப்பெரிய உயர்வு இதுவாகும்.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 509 புள்ளிகள் உயர்ந்து 17,352 புள்ளிகளில் முடிவடைந்தது. டோக்கியோ, ஹாங்காங், சீயோன் பங்குச்சந்தைகள் சரிவுகளுடன் வர்த்தகத்தை முடித்த நிலையில், ஷாங்காய், ஐரோப்பியப் பங்குச்சந்தைகள் லாபத்துடன் முடிந்தன.
ஏறுமுகத்திலிருந்த தங்கம் விலையும், சற்றுக் குறைந்துள்ளது. இந்த போர் பதற்றத்தால் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 96 டாலரை எட்டிய நிலையில், போர் பதற்றம் தணியும் சூழலால் பீப்பாய்க்கு 94.13 டாலராகக் குறைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த விலை வீழ்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. ஒருவேளை உக்ரைனை ரஷ்யா தாக்கினால், கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்து உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.