உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நேற்று (07-02-24) கடும் எதிர்ப்பை மீறி நாட்டில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியிருந்தது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த பொது சிவில் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அந்த மாநிலத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும். இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியில் இன்று (08-02-24) வன்முறை வெடித்துள்ளது.
ஹல்த்வானி, பன்புல்புரா காவல் நிலையம் அருகே மதராஸா கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் ஆக்கிரமிப்பு இடத்தில் உரிய அனுமதி இன்றி சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருவதாகக் கூறி நகராட்சி அதிகாரிகள் இடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கோபமடைந்து நகராட்சி அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோதலைத் தொடர்ந்து, சிலர் கல்வீசி, வாகனங்களுக்குத் தீ வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான காவல்துறையினர், அங்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி பிறப்பித்துள்ளார். மேலும், தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரகாண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.