தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பினர்.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுவரும் நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள திமுக எம்.பி.க்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மிகக் காட்டமாக பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் ஆளுநர், சட்டப்படி செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். ஆளுநர் காட்டாட்சி நடத்துகிறாரா எனக் கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு, அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.