2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார்.
தற்போது மாநிலங்களவையில் பேசிய வைகோ, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை வங்கக்கடலில் தூக்கி எறியுங்கள் என ஆவேசமாக பேசினார். மேலும், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும். அனைத்து நம்பிக்கைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சுதந்திர போராட்டத்தின் அடிப்படையே. இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு வேண்டுமென்றே குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குடியுரிமைக்காக காத்திருக்கிறார்கள் என்றார்.