4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடியது. தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மைதானத்தில் இந்தத் தொடர்கள் நடைபெறவுள்ளன. அதில், முதல் ஆட்டமான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடின. அதேபோல், போட்டிக்கான கடைசி ஆட்டமும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியையும், நரேந்திர மோடி மைதானத்தையும் வெடி வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் மூலம் மும்பை காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் (05-10-23) இரவு மும்பை காவல்துறையினருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயை விடுக்கவிக்க வேண்டும். அதோடு சேர்த்து ரூ. 500 கோடி பணமும் தர வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வெடி வைத்து தகர்த்து விடுவோம். இந்த தாக்குதலை நடத்துவதற்காக ஆட்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலின் அனுப்புநர் யார் என்ற கோணத்தில் மின்னஞ்சலின் முகவரியைத் தீவிரமாகக் கண்காணித்தும், விசாரித்தும் வருகின்றனர்.