ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில் நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை மற்றும் ஆந்திர சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சரான ரோஜா, சந்திரபாபு நாயுடுவை விமர்சித்து வந்தார்.
அதற்கு பதில் தரும் விதமாக, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணா, ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவு படுத்தும் விதமாக ஆபாசமான வார்த்தைகளில் பேசியிருந்தார். மேலும் அவர், ரோஜா தவறான படங்களில் நடித்த வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவை அவர் விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதற்கு ஆந்திர மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக டி.ஜி.பி.க்கு புகார் அளித்தனர். இதனையடுத்து, குண்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணாவை நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இதனைதொடர்ந்து, திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரோஜா கண்ணீர் மல்க நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர், “பண்டாரு சத்ய நாராயணாவின் கருத்து என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. நான தவறான படங்களில் நடித்ததாக என்னை பற்றி தவறாக சொல்கிறார்கள். என்னை பற்றி தவறாக பேசுவதற்கு முன் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை நினைத்து பார்க்க வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இவ்வாறு பேசுவார்களா?. கடந்த 1999ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அப்பாது எனது குணம் சரியில்லை என்று கட்சியில் இருந்து புறக்கணிக்க வேண்டியது தானே? உங்கள் கட்சியில் இருக்கும் போது நல்லவராக தெரிந்த நான் வேறு ஒரு கட்சிக்கு சென்று விட்டபோது எப்படி கெட்டவராக இருக்க முடியும்” என்று கூறி கண்ணீர் மல்க பேசினார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணித் தலைவர் வாங்கலபுடி அனிதா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியையும் மற்றும் அவரது மருமகளையும் தரக்குறைவான வார்த்தைகளில் ரோஜா பேசியுள்ளார். அதற்கு அவர் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மாநில அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? சட்டசபையில் அமைச்சர் ரோஜா பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கடந்த 4 1/2 ஆண்டுகால ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா நடித்த படத்தின் ட்ரெயிலர் மட்டும் தான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தையும் வெளியிடுவோம்” என்று கூறினார்.