நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். அவர்கள் நடத்திய அந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து நியூஸ்கிளிக் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சியினர், நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி நியூஸ்கிளிக் நிறுவனம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீதும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தா மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நியூஸ்கிளிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.
இந்த நிலையில், நீயூ யார்க் டைம் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில், அமெரிக்க கோடீஸ்வரரான நெவில் ராய் சிங்கம், சீன அரசாங்க ஊடக இயந்திரத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். மேலும், உலகம் முழுவதும் அதன் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்து வருகிறார் என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பதிவில், “தி நியூயார்க் டைம்ஸ்-க்கு முன்பே, நியூஸ்க்ளிக் என்பது சீனப் பிரச்சாரத்தின் ஆபத்தான உலகளாவிய வலை என்று இந்தியா நீண்ட காலமாக உலகிற்குச் சொல்லி வருகிறது. ஒத்த எண்ணம் கொண்ட சக்திகளின் ஆதரவுடன், நெவில் ராய் சிங்கம் ஒரு சந்தேகத்திற்குரிய இந்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறார். 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் சட்ட அமலாக்க முகவர் பணமோசடிக்கான வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியபோது, காங்கிரஸும் ஒட்டுமொத்த இடது தாராளவாத சூழலும் அதைக் காக்க வந்தன” என்று காங்கிரஸை சாடிப் பேசினார். இதையடுத்து, பா.ஜ.க மக்களவை உறுப்பினர் நிசிகாந்த் துபே, காங்கிரஸ் கட்சியினருக்கும், சீனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. அத்தோடு சீனாவில் இருப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், நியூஸ்கிளிக் செய்தி வலைத்தளத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் ஆகியோருக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஸ்ரீதர் ராவ், உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எல்.சி.கோயல் உள்ளிட்டோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டம் குறித்து முழுமையாக ஆராயும் வகையில் உயர்நிலை விசாரணையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நியூஸ்கிளிக் செய்தியில் வெளியான ரஃபேல் போர் விமானம் குறித்த செய்திகளும், எதிர்க்கட்சிகள் நிலைப்பாடும் முற்றிலுமாகப் பொருந்திப்போகும் நிலையில், இவை அனைத்தும் தற்செயலான நிகழ்வு இல்லை என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
வெளிநாட்டின் தூண்டுதலின் பேரின், நாட்டின் ஜனநாயக நடைமுறையில் தலையிட்டு, இது போன்ற தவறான செய்திகளைப் பரப்பும் சக்திகளை நாம் ஒடுக்கவேண்டாமா?. தேசபக்தி, ஒற்றுமை என்ற பெயரில் இது போன்ற சக்திகள் குரல் எழுப்புவதை நாம் அனுமதிக்க முடியுமா?. இந்தியாவில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம், சீனாவுக்காகப் பணியாற்றி வருவது கவலையும், கோபத்தையும் அளிக்கிறது. போலி செய்திகள் ஆகியவற்றால் இந்தியர்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். கொரானா பெருந்தொற்று காலத்தில் இந்தியா குறித்து தவறான தோற்றத்தை பரப்ப முயன்றது என்பது சீனாவின் புகழை காப்பாற்றுவதற்கு இணையானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.