உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேர்வுகள் பாதிக்கப்பட்டன. சில மாநிலங்களில் மாணவர்களை அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வீட்டில் இருந்து ஆன்லைனில் பாடம் நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரமாக இணையம் வழியாகப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு சிக்னல் கிடைக்காமல் அடிக்கடி இடையில் பிரச்சனை ஆனது. இதனால் செய்வதறியாது தவித்த அவர், திடீரென அருகில் இருந்த மரத்தில் ஏறி சிக்னல் கிடைக்கிறதா என்று பார்த்துள்ளார். சிக்னல் நல்ல முறையில் கிடைக்கவே அவர் தொடர்ந்து மரத்தில் இருந்து பாடம் நடத்தியுள்ளார். மாணவர்களுக்காக எந்தக் கஷ்டத்தையும் தாங்குவேன், அவர்களின் படிப்பே எனக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.