
உச்சநீதிமன்றம் இந்தியாவில் கரோனா பரவல் கையாளப்படுவது குறித்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும், அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து சரியான விகிதங்களில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், "ஒரு தேசிய நெருக்கடியில், மத்திய அரசு முழு நாட்டிற்கும் தடுப்பூசிகளை வாங்க வேண்டும். மாநிலங்கள் இதில் பின்தங்கிய நிலையில் உள்ளன. உலகளவில் பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் உங்களுக்குத் தடுப்பூசிகளை வாங்குவோம் என்று நீங்கள் அவர்களிடம் கூற வேண்டும். இதனால் ஒரு தெளிவு கிடைக்கும். மொத்தமாக வாங்குவதால் குறைந்த விலையில் தடுப்பூசிகள் கிடைக்கிறது என மத்திய அரசு கூறுகிறது. இதுதான் காரணமென்றால், மாநிலங்கள் ஏன் அதிக விலை தர வேண்டும். நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு ஒரே விலை இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளது.
தொடர்ந்து, "45 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு, நாங்கள் தடுப்பூசி வழங்குவோம். ஆனால் 45 வயதிற்கும் குறைந்தவர்களுக்கு மாநிலங்களே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் என மத்திய அரசு கூறுவதன் காரணம் என்ன" எனக் கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம், "இதற்கான உங்களின் காரணம் 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இறப்பு சதவீதம் அதிகமாக இருந்தது என்பதே. ஆனால் இரண்டாவது அலையில் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. 45 வயதுக்குக் குறைவானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது. மேலும், இணை நோயுள்ள 18 முதல் 45 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி வழங்குவது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
இதனைத்தொடர்ந்து, கோவின் செயலியில் பதிவு செய்து தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வது குறித்து கேள்விகளை எழுப்பிய போது. "உங்கள் காதை நீங்கள் களத்தில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். ராஜஸ்தானில் பணிபுரியும் ஜார்க்கண்டை சேர்ந்த ஏழை விவசாயத் தொழிலாளி, தடுப்பூசிக்காகப் பதிவு செய்ய ஜார்க்கண்ட் செல்லவேண்டியுள்ளது. இணையச் சேவை இல்லாதவர்கள் அல்லது அதைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் கோவின் செயலியில் எவ்வாறு பதிவு செய்வார்கள்..? புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள்?" என்றும் கேள்வியெழுப்பியது.