டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் 5ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. பின்னர் இந்து ரக்ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்த தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. இந்த விஷயத்தில் வன்முறை இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த தாக்குதல் சம்பவங்களால் மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்களது குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளனர். இளைஞர்களுக்கும் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய பயம் உருவாகியுள்ளது. தயவுசெய்து வன்முறையை நிறுத்துமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். யாரையும் பாதிக்காத வகையில் ஒரு தீர்வினை காண வேண்டும்" என தெரிவித்துள்ளார்.