புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-ஆவது சட்டப் பேரவையின் முதலாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கியது. துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 2021-22 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:
தாக்கல் செய்யப்பட்ட 9,924 கோடி பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. குறிப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும், ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ.5,000 வழங்கப்படும். விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். புதிய உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயர்த்த பிரதான் மந்திர் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.60 லட்சம் செலவில் 6 புதிய கிணறுகள் அமைக்கப்படும்.
புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, சந்தன மரங்கள் வழங்கப்படும். 'பசுமை புதுச்சேரி' திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம் உருவாக்கப்படும். ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். கறவை மாடுகள் பாராமரிக்க கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் தீவனம் வழங்கப்படும். கால்நடை இனப்பெருக்கம் செய்யத் தாது உப்பு கலவை வழங்கப்படும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும். கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.
அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் உள்ளிட்டவைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். மூடப்பட்டுள்ள நியாவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்படும். இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.
100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும். மாணவர் இடை நிற்றலை தவிர்க்க, கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இதற்காக கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கப்படும். உயர்கல்விக்கு ரூ 296.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. இருப்பினும் 24 மணி நேரமும் மின் விநியோகம் தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தெரு மின் விளக்குகளையும் எல்.ஈ.டி விளக்குகளாக மாற்றப்படும். 10 தொழிற்சாலைகளுக்கு உயர் மின் இணைப்பும், 50 தொழிற்சாலைகளுக்கு குறைந்த மின் இணைப்பும் வழங்கப்படும்.
அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நவீன கணினி வயர்லெஸ் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும். கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். மீனவர்களுக்கான டீசல் மானியமும், மீன் பிடி தடைக்கால நிவாரணமும் உயர்த்தி வழங்கப்படும். தடைக்காலத்தில் விசைப்படகு பராமரிப்பு உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கரோனாவை எதிர்கொள்ள கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆயுஷ் மருத்துவமனை கட்ட ரூ.795.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தாட்கோவில் மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். சுற்றுலா வருபவர்களை கவரும் வகையில் தனியார் பங்களிப்புடன் கடற்கரை மேம்படுத்தப்படும். நீர் விளையாட்டுகள், பாய்மரப்படகு தளம் அமைக்கப்படும். நலிவடைந்த நிலையில் உள்ள புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ என்.எஸ்.ஜெ.ஜெயபால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.கே.டி.ஆறுமுகம் அரசு கொறடாவாக தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரால் நியமிக்கப்பட்டார்.