
ஜக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம் மீது பாலியல் குற்றச்சாட்டுகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடியுள்ளனர் இரு பெண்கள். ஐதராபாத்தைச் சேர்ந்த யாமினி ரகானி மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் நீதா ஜெய்காந்தன் இருவரும் இன்று டெல்லியில் ‘ப்ரஸ் க்ளப் ஆஃப் இந்தியா’அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “ஆன்மீக வழிகாட்டுதல் என்ற போர்வையில், ஈஷா நிறுவனத்தில் பாலியல் கொடுமைகள், குற்றங்கள் நடக்கின்றன. அரசியல் மற்றும் அதிகார அமைப்புகள் ஜக்கியை தொடர்ந்து காப்பாற்றி வருகின்றன. அவர் செய்த குற்றங்கள் குறித்து, நீதிமன்றக் கண்காணிப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிக்கான அனைத்து வழிகளையும் முயற்சி செய்துவிட்ட நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அணுகுவதுதான் எங்களின் கடைசி நம்பிக்கை. குற்றம் சாட்டப்பட்டவர் சக்தி வாய்ந்தவராக இருப்பதாலேயே, எங்களுக்கான நீதி மறுக்கப்படக் கூடாது. இப்போது நாங்கள் வெளியே வந்து இதுகுறித்துப் பேசுவது பழிவாங்கும் நோக்கத்தால் அல்ல. உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
புகழும் அதிகாரமும் கொண்டுள்ள அமைப்பால் நாங்கள் துன்புறுத்தப்பட்டுள்ளோம், பாலியல் அத்துமீறலுக்கு ஆளானோம். நாங்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்த நாட்டின் மகள்களாக, எங்கள் பிள்ளைகளும் நாங்களும் சந்தித்த கொடுமைக்கு நீதி வேண்டும். இந்தக் கொடுமைகள் ஏதோ தெரியாமல் நடந்தவை அல்ல. தொடர்ந்து, திட்டவட்டமாக, தைரியமாக நடந்தது. எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. ஆன்மீகப் பயணமாக தொடங்கிய இந்த பயணம், பாலியல் அத்துமீறலில் முடிந்தது. இது குறித்து நீதிமன்றங்கள், காவல்துறை, உயர் அதிகாரிகளை நாடியும், அவர்கள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் எங்கள் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருந்தாலும் நாங்கள், தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தனர்.
இது குறித்து யாமினி தெரிவிக்கையில், “நான் ஈஷா அறக்கட்டளைக்கு என் மனக்கவலைகளில் இருந்து நலம் பெறும் நோக்கத்துடன் சென்றேன். ஆனால், அதற்குப் பதிலாக தீவிரமான சுரண்டலுக்கு உள்ளானேன். அவர்கள் எனக்குத் தந்த வேதனை உடல் அளவில் மட்டுமல்ல, என்னை உணர்ச்சிப்பூர்வமாகவும், ஆன்மீக ரீதியாகவும், ஆழமாகவும் பாதித்தது. இன்று, நான் வெளியுலகுக்கு என் குரலை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார். இவரது மகன் ஈஷாவுக்கு சொந்தமான பள்ளியில் பயிலும்போது சக மாணவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர். இந்தப் புகாரை ஜக்கி வரை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவரை அமைதிப்படுத்தும் வேலையைத்தான் ஈஷா செய்துள்ளது. இவரது மகன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினார்.
அதே போல் நீதா ஜெய்காந்தன் பேசுகையில், “2008 ஆம் ஆண்டிலிருந்து ஜக்கி வாசுதேவுக்கு முழுமையாக பக்தியுடன் இருந்தேன். எனது மொத்த குடும்பமும்ம் ஈஷா அறக்கட்டளைக்குள் குடியேறியது. ஆனால் 2010ஆம் ஆண்டு, எனது மகள் ஈஷா ஹோம் ஸ்கூல் ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தீட்சை என்ற பெயரில் ஜக்கி வாசுதேவால் நானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். நான் என்னுடைய வேதனையில் தனியாக இருப்பதாக எண்ணினேன். ஆனால் இப்போது புரிகிறது, மௌனம் குற்றவாளியை பாதுகாக்கும். இது குறித்து குரல் எழுப்புவதே நீதிக்கான முதல் நடவடிக்கையாகும்” என்று தான் அனுபவித்த கொடுமையை விளக்கினார். இவர்கள் இருவர் குறித்தும் ஈஷாவால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் நக்கீரன் முன்பே விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளது.
மேலும் அவர்கள், “ஈஷாவில் பட்ட கொடுமைகளை தைரியமாக வெளியே சொல்ல வரும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பும் மனதளவிலான ஆதரவும் வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு வேறு இடமில்லை. எங்களை பாதுகாக்கக்கூடியவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று நம்புகிறோம். இந்த நாட்டில் நீதி எந்த அதிகாரத்துக்கு முன்பாகவும் தலைகுனியாது என்பதை நிரூபிக்க வல்லவர் அவர். நீங்கள் எங்களை புறக்கணிக்க மாட்டீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய நாடே இந்தப் பெண்களின் குரலை கேட்கச் செய்ய வேண்டும். சமூக அமைப்புகள், மகளிர் உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் இது குறித்து ஒன்றாய் நின்று குரல் கொடுக்கவேண்டும். இது எங்களது போராட்டம் மட்டுமல்ல. மௌனமாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்குமான போராட்டம். இந்தப் பெண்கள் எதிர்பார்ப்பது, சட்டரீதியான தீர்வு மட்டுமல்ல... ஒரு ஜனநாயக சமூகத்தைக் கொண்ட நாடாக, எந்த நபரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்வதே” என்று குறிப்பிட்டனர்.