தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று புதுச்சேரியில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் தேங்கி நிற்கும் சூழலும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
முன்னதாக புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருந்தது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி 21 சென்டிமீட்டர் மழை புதுவையில் பதிவாகியிருந்தது. தற்போது 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருந்தது. அதே சமயம் புதுச்சேரியில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும் விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும். இளம் கன்றுக்குட்டிக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். மற்ற வீடுகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். படகுகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதோடு புயல் காரணமாக புதுச்சேரியில் ரூ. 100 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.