நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆறு மாநிலங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன.
கரோனா பரபரப்புகளுக்கு மத்தியில், வரும் செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வையும், ஜே.இ.இ. தேர்வையும் நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துவரும் சூழலில், இந்த தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆறு மாநிலங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன. 11 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.