புல்வாமா தாக்குதல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று (15.2.2019) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில், சி.ஆர்.பி.எப். துணை இராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது திடீரென்று நடைபெற்ற தற்கொலைப் படை பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக 40 வீரர்கள் பலியாயினர் என்பது நமது நெஞ்சை உலுக்கும் கொடுந்துயர அதிர்ச்சிச் செய்தியாகும்.
கண்டனத்திற்குரியதாகும்!
உயிரிழந்த இராணுவ வீரர்கள் 40 பேரில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மேலும் சோகத்திற்குரியது! மனித உயிர்கள் இப்படி - கடமையாற்றும் களத்தில், கோழைத்தனமான தாக்குதல்கள் மூலம் - பறிக்கப்படுதல் மிகவும் கண்டனத்திற்குரியதாகும்!
இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பானது பொறுப்பேற்றுள்ளது. அண்டை நாட்டுடன் நல்லுறவு பேணவேண்டும் என்ற இந்தியாவின் பெருந்தன்மையை பாகிஸ்தான் அரசு பலவீனமாகக் கருதக்கூடாது.
நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைத் தந்த அந்த உத்தம சீலர்கள் 76 ஆவது பட்டாலியன் பிரிவைச் சார்ந்தவர்கள். இதில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த இராணுவ வீரர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் உயிர் நீத்தனர்.
அனைவருக்கும் நமது வீர வணக்கம். அவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தாருக்கு நமது ஆறுதல் உரித்தாகுக! இத்தகைய பயங்கரவாதக் குழுக்களின் செயலை, பாகிஸ்தான் மறைமுகமாக ஊக்கப்படுத்துவது என்பது விரும்பத்தகாததாகும். பழிக்கும், குற்றச்சாட்டுக்கும் உள்ளாக்கும்!
உலக அமைதிக்கு வழிகாண வேண்டும்
நாகரிகமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டி உலக நாடுகள் அனைத்தும் இத்தகைய கொடுஞ்செயல்களைக் கண்டித்து, இனிமேலும் இதுபோன்ற பயங்கரவாதத்தை எந்த அரசும் ஊக்குவிக்காமல், உலக அமைதிக்கு வழிகாண வேண்டும்.
நவீன அறிவியல் யுகத்தில் போர் என்பது மனிதகுல அழிவுக்கே வழிவகுக்கும். ஆதலால், பிரச்சினைகளை, நட்புறவு, நல்லெண்ணத்துடன் பேசித் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்.
அரசியல் கண்ணோட்டத்திற்கு அறவே இடமில்லை
அய்.நா. போன்ற மாமன்றங்கள் வெறும் காட்சி - பேச்சு அரங்குகளாக இல்லாமல், ஆக்கபூர்வ மனித உரிமைப் பேணும் அமைப்புகளாக, பயனுறு வகையில் செயல்பட முன்வருவது அவசரம், அவசியம்! நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு அறவே இடமில்லை.’’