உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றது முதல் சட்டம் மற்றும் ஒழுங்கு துறையில் தமிழர்களுக்கு தொடர்ந்து பல்வேறு உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அலிகர் மாவட்டக் காவல்துறை தலைமை கண்காணிப்பாளராக (எஸ்எஸ்பி) தமிழரான ஜி.முனிராஜ்.ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளில் எட்டு பேர் தமிழர்கள் ஆவர். இதில் இருவரைத் தவிர மற்ற அனைவருமே இளம் அதிகாரிகள் ஆவர். உ.பி.யின் பதட்டமான மற்றும் கிரிமினல் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் பெரும்பாலும் தமிழக அதிகாரிகளையே முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து நியமித்து வருகிறார். அந்த வகையில் சிஏஏ எதிர்ப்பு போராட்ட களத்தின் மிகமுக்கிய பகுதியான அலிகர் மாவட்டத்திற்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரியான முனிராஜ் எஸ்எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
புலந்த்ஷெஹரின் எஸ்எஸ்பியாக இருந்த போது பாஜக, பஜ்ரங்தளம் மற்றும் முதல்வர் யோகி துவக்கிய இந்து யுவவாஹிணி ஆகிய அமைப்புகளின் மீது தைரியமாக வழக்கு தொடர்ந்த இவர் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றார். அதேபோல பரேலியில் இஸ்லாமியர்களின் முஹர்ரம் ஊர்வலத்தில் உருவாக இருந்த கலவரத்தை தடுத்து நிறுத்தி, அதற்காக பரேலியின் பாஜக எம் எல் ஏ மீது வழக்கும் பதிவு செய்தார். இதன் காரணமாக பரேலி மக்கள் ‘உ.பி. சிங்கம்’ என்று முனிராஜை பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டி மகிழ்ந்தனர். 2018 ஆம் ஆண்டில் சிறந்த போலீஸுக்கான உத்தரபிரதேச அரசின் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.