கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்கக் கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதில் முக்கியமான நபராக பார்க்கப்படும் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. ஸ்வப்னா உள்ளிட்ட நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தங்கக் கடத்தல் தொடர்பாக இவரிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையே அவர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. தற்போது மேலும் மூன்று நாட்கள் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.