மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் பிம்பரி - சின்ச்வாட் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்கப்படும் சமோசா மிகவும் பிரசித்தி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் (08-04-24) இந்த கேண்டீனில் விற்கப்பட்ட சமோசாவில் மாட்டிறைச்சி, கருத்தடை சாதனம், கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் கலந்து விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக அந்த கேண்டீனுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், போலீசாருக்கு கிடைத்த தகவல் உண்மை என கண்டறியப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த சமோசாக்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அந்த விசாரணையில், ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மற்றும் மசார் ஷேக் ஆகியோரின் எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ், அந்தத் தனியார் நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தத்தை வைத்திருந்தது. இந்த நிலையில், எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ் வழங்கிய சிற்றுண்டியில் ஒரு முறை பேண்டேஜ் இருந்ததால் இவர்களின் ஒப்பந்தத்தை, அந்தத் தனியார் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னர், அந்த நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸின் நிறுவனர்களான ரஹீம் ஷேக், அசோர் ஷேக் மற்றும் மசார் ஷேக் ஆகியோர், மனோகர் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை அழைத்து, சமோசாவில் கருத்தடை சாதனம், குட்கா, மாட்டிறைச்சி, புகையிலை போன்ற பொருட்களை அடைத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்ட மனோகர் எண்டர்பிரைசஸின் ஊழியர்களான ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர், சமோசாவில் அந்த பொருட்களை அடைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மசார் ஷேக், ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.