பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுப்பதற்காக ரயில்வேயில் 60 தொழிற்சங்கங்கள் இணைந்து உருவாக்கி உள்ள கூட்டமைப்பு வேலை நிறுத்தம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒன்றிய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரித்து வருகின்றனர். இதற்கு முன்பு 1974 ஆம் ஆண்டு ரயில்வே ஊழியர்கள் சுமார் 20 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால் நாடு முழுவதும் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் 12 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்படும். சுமார் 4 லட்சம் பாதுகாப்புத் துறை ஊழியர்களிடமும் வேலைநிறுத்தம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.