மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை (28.11.2019) மாலை 06.40 மணியளவில் பதவியேற்கிறார். பதவியேற்பு விழா மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறுகிறது. கூட்டணி கட்சியின் தலைவர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். முதல்வருடன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்ய தாக்கரே, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து, அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, பதவியேற்பு விழா அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.