
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒருபக்கம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி இன்னொருபுறம் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியிலும், தனது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பல்வேறு மாநிலங்களில் நிலை நிறுத்தவும் முயற்சித்து வருகிறார்.
இந்தநிலையில் தெலங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ், பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்றுதிரட்ட திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதற்காக அவர் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தபோது, அவரிடம் சந்திரசேகர் ராவ் இதுகுறித்து பேசியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.