மேற்கு வங்கம் மாநிலத்தில் ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலையில் உணவு, தானியங்களை வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறையினருக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்து சோதனை நடத்த வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அவர்களின் கார்களை வழி மறித்து மர்ம நபர்கள் சந்தேஷ்காளி என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காரில் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பாதுகாப்புக்காக உடன் சென்ற துணை ராணுவப்படை வீரர்கள் எனப் பலரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் சென்ற கார்களும் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் காரணம் என பாஜகவினர் குற்றம் சாட்டினர். மேலும் இந்தத் தாக்குதலை நடத்தியது யார் எனத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர ஆத்யா அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை 17 மணி நேரச் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையிலும் அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக சங்கர் ஆத்யாவின் மனைவி தெரிவித்திருக்கிறார்.