ஆந்திர மாநிலம் – சித்தூர் மாவட்டம் – குப்பம் சட்டமன்றத் தொகுதியானது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும். பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு 8வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், சித்தூர் மாவட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும், குப்பம் சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பரத் போட்டியிடுகிறார். குப்பம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்றை சிலர் நிறுவியுள்ளனர்.
அந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பரத், வீரப்பன் நினைவுத்தூணைத் திறந்து வைத்து சிரித்தபடியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா காவல்துறையினருக்கு முன்பு சிம்ம சொப்பனமாக இருந்து, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் நினைவுத்தூணை ஆளும்கட்சியின் மேல்சபை உறுப்பினரான பரத் திறந்து வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.