இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், கடந்தட் சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷண், வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடி வந்தனர். அதிலும் இந்த போராட்டங்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சாக்ஷி மாலிக் முக்கியப் பங்கு வகித்தவர். நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் வீரியமடைய சர்வதேச கவனத்தையும் பெற்றது.
இதனிடையே புகாரின் பேரில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமை பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்ஷி மாலிக் அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய பிரிஜ் பூஷண் சரண் சிங் முயன்றார் என்று முன்னாள் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சாக்ஷி மாலிக் எழுதியுள்ள ‘விட்னஸ்’ என்ற அவரது சுயசரிதை புத்தகத்தில், “கடந்த 2012 ஆம் ஆண்டு கஜகஸ்தானில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின்போது, எனது பெற்றோருடன் செல்போனில் பேசுவதற்காக என்னை பிரிஷ் பூஷண் அவரது அறைக்கு அழைத்தார். அப்போது செல்போனில், நான் எனது பெற்றோரிடம் பேசிய பிறகு அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். உடனே நான் தட்டிவிட்டு கதறி அழுதேன். பின் அங்கிருந்து சென்றுவிட்டேன். அவர் அதிகாரம் படைத்தவர்; அவரால் எனது மல்யுத்த வாழ்க்கையே முடிந்துவிடும் என்று பயந்து வெளியே சொல்லாமல் இருந்தேன்” என்று பகீரங்க குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
இந்த புத்தகம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டியளித்த சாக்ஷி மாலிக், “பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக பலரும் கூறினார்கள்; ஆனால் அதில் உண்மையில்லை. பாஜகவைச் சேர்ந்த ‘பபிதா போகத்தான் பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீரர்களைப் போராடத் தூண்டியது. பாஜக தலைவர்களான பபிதா போகத், தீரத் ரானா ஆகியோர்தான் போராட்டத்திற்கு காரணம்.
பபிதா போகத்தின் ஆலோசனையின்படியே, எங்களது போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால், ஒரு பெண் கூட்டமைப்பின் தலைவராக இருந்தால் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நன்மை நடக்கும் என்று நாங்கள் நம்பினோம். பபிதா போகத்தின் ஆலோசனைப்படி போராட்டத்தை தொடங்கியிருந்தாலும், முற்றிலுமாக அவரை நம்பியே செயல்படவில்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை அறிந்தே போராட முடிவு செய்தோம்” எனக் கூறியுள்ளார்.