நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவு கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து மூன்றாவது ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
தேசிய அளவில் பா.ஜ.க பல இடங்களில் வெற்றி பெற்றியிருந்தாலும், சில மாநிலங்களில் தோல்வியை அடைந்துள்ளது. இதனால், பல முக்கிய பா.ஜ.க தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “மணிப்பூரின் நிலைமையை முன்னுரிமையுடன் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தல் பேச்சு வார்த்தைகளில் இருந்து விடுபட்டு தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
அதே போல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் ரத்தன் ஷர்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தேர்தலில் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்பதை விட ஆர்.எஸ்.எஸ்-ஐ அணுக வேண்டிய பொறுப்பு பா.ஜ.கவுக்கு உள்ளது. செல்ஃபி இயக்க ஆர்வலர்களால் அங்கீகாரத்திற்கான உந்துதல் இல்லாமல் உழைத்த வயதான அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.க தலைவர்கள் மட்டுமே உண்மையான அரசியலைப் புரிந்துகொள்கிறார்கள், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் முட்டாளாக இருந்தார்கள் என்ற தவறான அகங்காரம் சிரிப்பதற்குத் தகுதியானது. சிறப்பாகச் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட தியாகம் செய்து, பின்னர் வந்தவர்களைக் காயப்படுத்துவது போன்ற காரணத்தினால்தான் உள்ளூர் பாஜக தொண்டர்கள் ஆர்வமின்மையாக இருக்கின்றனர்.
இதற்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த உதாரணம். ஏற்கனவே பா.ஜ.க மற்றும் பிளவுபட்ட சிவசேனா பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. ஆனால், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு பா.ஜ.கவில் இணைந்தது. உறவினர்களுக்கு இடையேயான உட்கட்சி சண்டையால் இரண்டு மூன்று ஆண்டுகளில் சரத் பவார் மறைந்திருப்பார். தேசியவாத காங்கிரஸ் ஆற்றலை இழந்திருக்கும். ஏன் இந்த தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டது? காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடித் துன்புறுத்தப்பட்டதால் பா.ஜ.க ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே அடியில் பாஜக தனது பிராண்ட் மதிப்பைக் குறைத்து கொண்டது. மகாராஷ்டிராவில் பல வருட போராட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் எந்த வித்தியாசமும் இல்லாமல் மற்றொரு அரசியல் கட்சியாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.