ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைவதற்கு அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று அமைச்சர் ரோஜா திருத்தணி முருகன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு வெள்ளி வேல் கொண்டு வந்து கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர், பிரபல திரைப்பட நடிகை, ரோஜா அவரது கணவர் ஆர்.கே. செல்வமணிவுடன் திருக்கோயில் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார், திருக்கோயில் சார்பில் அவருக்கு பூரண மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்று அழைத்துச் சென்றனர். திருக்கோயில் மூலவர் முருகப் பெருமானையும் உற்சவர் முருகப் பெருமானையும் தரிசனம் செய்துவிட்டு அவர் கையில் வெள்ளி வேல் கொண்டு வந்திருந்தார். இதனை மூலவர் முருகப்பெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரில் அர்ச்சனை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த அந்த வெள்ளி வேலை திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் நடிகை ரோஜா அவர்களுக்கு மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள் .
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரோஜா, “மீண்டும் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைய வேண்டும், ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வெள்ளி வேல் காணிக்கையாக திருத்தணி முருகன் கோவிலுக்கு வழங்கி உள்ளேன். மேலும் கந்த சஷ்டி நிகழ்ச்சியை முன்னிட்டு திருத்தணி முருகப் பெருமானின் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தேன். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆட்சி செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறார். அவரது வளர்ச்சி பிடிக்காமலும், திரைப்பட நடிகையாக இருந்து அரசியலில் மக்களின் சேவை செய்து வரும் என்னுடைய வளர்ச்சி பிடிக்காமலும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியவர்கள் என்னை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எப்போதும் கூட்டணி வைத்ததில்லை. எங்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசுடன் கூட்டணி எப்போதும் வைக்கமாட்டோம். எங்கள் மாநில அரசுக்கு எப்போது மத்திய அரசு அமைகின்ற அரசு நல்லது செய்கிறார்களோ, அவர்களுக்கு வெளியில் இருந்து எங்கள் கட்சியின் சார்பில் ஆதரவு அளிப்போம். ஒரு பெண் என்று கூட பாராமல் என்னை கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். ஆந்திர மாநிலத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் தான் தெலுங்கு தேசம் கட்சியினர் இப்படி விமர்சனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் எந்த எலக்சன் வந்தாலும் அல்லது உள்ளாட்சி எலக்சன் வந்தாலும் மக்கள் ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு தான் ஆதரவளிப்பார்கள்; ஓட்டு போடுவார்கள்.
ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு சென்ற சந்திரபாபு நாயுடு தற்போது ஜாமீனில் உடல் நலம் சரியில்லை என்று கூறித்தான் வெளிவந்துள்ளார், அவர் நிரந்தரமாக இந்த ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு செல்வது உறுதி. அவருக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுத்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது என்.டி.ஆர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் அனைத்து திட்டங்களையும் கிடப்பில் போட்டு, ஆந்திர மாநிலத்தை பின்னுக்கு தள்ளியவர்தான் 14 வருஷம் ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு என்று காட்டமாக விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் அவருடன் பக்தர்கள் பலர் செல்பி எடுத்துக் கொண்டனர், புகைப்படம் எடுத்துக்கொண்டனர், மேலும் இவருக்கு வரவேற்பு அளிக்க வந்த வட்டாட்சியர் மதன் மற்றும் திருக்கோயிலை சார்ந்தவர்கள் பொதுமக்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.