Skip to main content

"காந்தியையே விடவில்லை.. உங்களை விட்டுவிடுவோமா? - கர்நாடக முதல்வருக்கு மிரட்டல் விடுத்த வலதுசாரி ஆதரவாளர் கைது!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

right wing

 

கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற பகுதியில், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த இந்து கோயில் ஒன்று, கர்நாடக அரசால் இடிக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடகாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸும் அரசின் நடவடிக்கையை விமர்சித்தது. 

 

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை (18.09.2021) பத்திரிகையாளர்களைச் சந்தித்த வலதுசாரி ‘ஆர்வலர்’ தர்மேந்திர சுரட்கல், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, அமைச்சர் சசிகலா ஜோலே ஆகியோரை தாக்கிப் பேசியதோடு, "நாங்கள் மகாத்மா காந்தியையே விடவில்லை. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைக் கொன்றோம். அப்படியிருக்கையில் உங்களை விட்டுவிடுவோம் என நினைக்கிறீர்களா?" என்றார். 

 

மேலும் அவர், "சித்ரதுர்காவிலும், தட்சிண கன்னடத்திலும், மைசூரிலும் அரசாங்கத்தால் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. அரசாங்கத்தை நடத்துவது யார்? காங்கிரஸ் ஆட்சியின்போது இது நடந்திருந்தால், நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்து மகாசபை இருக்கும்வரை, இந்து கோயில்களை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று மசூதிகள் அல்லது தேவாலயங்கள் இடிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணமுடியுமா? கோவில்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன. நமது அரசியலமைப்பு சமத்துவத்திற்கான உரிமையை உறுதிசெய்கிறது என்றால், இந்துக்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள்?" என பேசினார். 

 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்து மகாசபா மாநில தலைவர் எல்.கே. சுவர்ணா, தங்களது அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இந்து மகாசபையின் பெயரைப் பயன்படுத்தி காந்திக்கு எதிராகவும், பிற அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதாகக் காவல்துறையிடம் புகாரளித்தார். இதனையடுத்து  தர்மேந்திர சுரட்கலும், அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

மங்களூர் நகர போலீஸ் கமிஷனர் சஷி குமார், தர்மேந்திர சுரட்கல் இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர் என்றும், ஆட்சேபனைக்குரிய நடத்தைக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் தனக்குத் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தர்மேந்திர சுரட்கல் தற்போது அகில இந்திய இந்து மகாசபை என்ற அமைப்பில் செயல்படுவதாக கூறப்படுகிறது. 

 

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கிரிமினல் சதி, மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் மோசடியில் ஈடுபடுவது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.