Skip to main content

நம்பிக்கையில்லா தீர்மானம்; பிரதமர் மோடி இன்று பதிலுரை

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Resolution of No Confidence Prime Minister Modi reply today

 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் விவாதத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேற்று பதிலளித்துப் பேசினர். இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதிலளிப்பார் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பதிலுரையைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.