ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் வட்டி விகிதங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ரெப்போ வட்டி (REPO INTEREST) விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6.00% இருந்து 5.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.
இந்த பரிவர்த்தனைகளுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி (SBI) NEFT பண பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 1 முதல் 5 வரையும், RTGS பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 5 முதல் 50 வரை கட்டணமாக வசூலித்து வந்தன. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு முழு கட்டண விலக்கு அளித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
இந்த சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதன் மூலன் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த கட்டணத்தை வரைமுறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.