மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த காரணத்தால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அமித்ஷாவுடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் கடந்த சில நாள்களில் அவரை சந்தித்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அமித்ஷாவைச் சந்தித்த மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.