மத்தியப் பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் நகரில் 12 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத சில நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை செய்யப்பட்ட அந்த சிறுமி நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் பட்டப்பகலில் வீதி வீதியாக அழுதபடி நடந்து சென்ற சி.சி.டி.வி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆடைகள் கிழிந்த நிலையில் உதவி கேட்ட அந்த சிறுமிக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பிறப்புறுப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த சிறுமி அழுது கொண்டே நிற்கும் காட்சியும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் உதவி கேட்க 'போ போ இங்கெல்லாம் நிற்காத' என்று சைகையில் துரத்தி விடும் காட்சியும் உள்ளது. இறுதியில் அந்த சிறுமியை அங்குள்ள ஆசிரம நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு எதிரான கண்டனக் குரல்கள் தற்போது எழுந்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத், மம்தா பானர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறுவயது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என அதிக எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் உள்ளது.
பெண்களைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு பா.ஜ.க அரசு உள்ளது. இந்த நாட்டில் நீதியும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை, உரிமையும் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் சிறுமியை நிலையை கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது. ஆனால், மத்திய பிரதேச முதல்வரும், பிரதமரும் இந்த சம்பவத்திற்கு வெட்கப்படுவதில்லை. தேர்தல் வாக்குறுதிகளுக்கும், பொய்யான முழக்கங்களுக்கு மத்தியில் பெண்களின் அலறல் சத்தத்தை அடக்கி வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.