இந்தியா முழுவதும் 91 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவுற்றது. 20 மாநிலங்களில் பரவியுள்ள இந்த தொகுதிகளில் பாஜக தலைவர்கள் நிதின் கட்கரி, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உள்பட பலர் களத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்தப்பின் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஊடகங்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 72,000 வரை வழங்கப்படும் என தெரிவித்தார். நியந்தம் யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி நாட்டில் உள்ள 20 சதவீத ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்தும் திட்டமாக இது இருக்கும் என கூறினார்.
இந்த திட்டத்தின்படி ஒரு ஏழை குடும்பத்தின் மாத வருமானம் 6000 எனில் இந்த குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின்படி மீதமுள்ள 6000 ரூபாய் மாதம்தோறும் அரசாங்கத்தால் உரியவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
மேலும் இதற்கான திட்டங்கள் மற்றும் கணக்கீடுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் அல்லது 25 கோடி மக்கள் பலனடைவார்கள்.