Skip to main content

ரூ. 8 கோடி கொள்ளை; 10 ரூபாய் குளிர்பானம் மூலம் சிக்கிய தம்பதியர்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

punjab finance company money incident 

 

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 10 ஆம் தேதி நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் சுமார் 8 கோடியே 49 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. 

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 7 பேரை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ஜஸ்வீந்தர் சிங், அவரது மனைவி மந்தீப் கவுர் தம்பதியையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் நேபாளம் தப்பிச் செல்வதற்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாராவுக்கு சென்றுள்ள தகவல் போலீசாருக்கு கிடைத்தது. 

 

அதையடுத்து பஞ்சாப் போலீசார் உத்தரகாண்ட் விரைந்தனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவும், பல பேர் முகக்கவசம் அணிந்தும் காணப்பட்டதால் கொள்ளையர்களைக் கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்று உடையில் சென்ற போலீசார் அங்கு இருந்த பக்தர்களுக்கு ரூ. 10 மதிப்புள்ள குளிர்பானங்களை வழங்கினர். வரிசையில் வந்தவர்களுக்கு அவர்கள் அணிந்து இருந்த முகக்கவசத்தை அகற்றிய பின்னரே குளிர்பானம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு வரிசையில் வந்த ஜஸ்வீந்தர் சிங் மற்றும் அவரது மனைவி மந்தீப் கவுர் ஆகியோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 21 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினர். கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் இருந்து இதுவரை சுமார் 5 கோடியே 96 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப் போலீசார் சமயோசிதமாக செயல்பட்டு நூதன முறையில் கொள்ளையர்களை பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்