வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவிடம் கட்டப்படும் எனவும், விவசாயிகளோடு கலந்தாலோசித்து அதற்கான இடம் தேர்வு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் சரண்ஜித் சிங் சன்னி, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளதாக விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.