பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் 180 ஆண்டுகள் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கீழூரில் நடந்த வாக்கெடுப்பில், அப்போதிருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 178 பேரில் 170 பேர் இணைய வேண்டும் என வாக்களித்த நாள் 1954 நவம்பர் முதல் நாள். அதையடுத்து பிரெஞ்சு நாட்டின் அரசு புதுச்சேரிக்கு விடுதலையளித்தது. இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்த இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு கொண்டாடி வருகின்றது.
அந்த வகையில் நேற்று புதுச்சேரி விடுதலை தினவிழா மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொட்டும் மழையில் புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர், பல்வேறு படைப்பிரிவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையிலேயே பல்வேறு மாநிலக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விடுதலை நாள் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, "இந்து திருமணங்களைப் பதிவு செய்வதில் ஏற்படும் தாமதங்களைப் போக்கும் வகையில் அதில் திருத்தம் செய்து திருமண நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை துணைப்பதிவாளர் பதிவு செய்யவும், 15 ஆண்டுகளுக்கு மேல் திருமண நாளில் இருந்து 40 ஆண்டுகள் வரை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அதை பதிவு செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் அரசின் மீட்புக்குழு வரும் வரை தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதற்காக 145 சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில கடற்பரப்புகளில் கடல் அரிப்பின் காரணமாக கடலோரக் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த பகுதிகளுக்கு இடையிடையே தமிழகப் பகுதிகளும் வருவதால் முழுமையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு தேசியக் கடலோர ஆய்வு மையத்தை புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று இந்த விழா மூலமாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.