புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இன்று புதிதாக 412 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,522 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தொற்று உறுதியானவர்களில் புதுச்சேரி தி.மு.க தெற்கு மாநில அமைப்பாளரும், உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சிவாவும் ஒருவர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைகாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
புதுச்சேரியில் இதற்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கரோனா உறுதி தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் கந்தசாமியும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அலுவலக உதவியாளராக உள்ள அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அறிகுறி அற்ற கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலமைச்சர் உதவியாளர் மற்றும் முதலமைச்சருக்கு மீண்டும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதமைச்சர் நாராயணசாமி,
''கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே உலாவுவதால் புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அரசை குறை சொல்லி பயனில்லை, தன்னால் முடிந்ததை அரசு செய்து வருகிறது. அரசை குறை சொல்வது சுலபம். மக்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் வெளியே சுற்றினால் 5 நாட்களில் அவரால் 100நபர்களுக்கு தொற்று பரவுகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ஊரடங்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகயை அரசு எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.