புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க துணை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, "எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உரிமை இல்லை. அதிகார பலத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை மாற்றுவது பா.ஜ.க.வுக்கு கைவந்த கலை. எங்கள் அரசைக் கவிழ்க்க பலமுறை திட்டம் தீட்டினார்கள், அதை நாங்கள் முறியடித்தோம். தேர்தல் நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை பா.ஜ.க. தொடங்கியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக, பிப்ரவரி 21- ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடைபெறும். துணைநிலை ஆளுநர் தமிழிசை அழைத்ததால் சந்தித்தேன்" என்றார்.