புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இன்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர். அதில் ரேஷன் கார்டுகளில் இலவச அரிசிக்கு பதிலாக, அனைவருக்கும் வங்கியில் பணம் செலுத்தப்படும் என்று கூறிய முதல்வர் நாராயணசாமியும், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் கடந்த 17 மாதங்களாக இலவச அரிசிக்கு பதிலாக பணம் போடாமல் ரூ.9 கோடி அளவில் முதல்வர் நாராயணசாமி விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்து உள்ளதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ, செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், " கடந்த சில மாதங்களாக ரேஷன் கார்டுகளில் இலவச அரிசி தரம் இல்லாமல் இருந்ததால், இலவச அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் போடுவதாக கூறிய, முதல்வர் நாராயணசாமி அவர்கள் கடந்த 17 மாதங்களாக இலவச அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் போடவில்லை. மேலும் 17 மாதங்களாக ஒரு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.600 வீதம் ரூ.9 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதால் இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனுவை கொடுத்தோம்" என்றார்.

ஏற்கனவே இலவச அரிசி ரேஷன் மூலம் வழங்குவது தொடர்பாக ஆளும் அரசுக்கும், கிரண்பேடிக்கு மோதல் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் புகார் மனு ஆளுநர் கிரண்பேடிக்கு துறுப்பு சீட்டாக கிடைத்துள்ளது. இதுகுறித்து உடனடியாக விசாரிக்கும்படி தலைமை செயலாளருக்கு கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாஜகவினர் அளித்துள்ள மனுவை விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.