புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ப்ரீபெய்டு மின்மீட்டர் பொருத்துவதை நிறுத்த வேண்டும் என தி.மு.க கோரிக்கை விடுத்தது. அதற்கு, "மின் திருட்டு, மின் பாக்கி போன்றவற்றை தடுப்பதற்காக ப்ரீ-பெய்டு மின்மீட்டர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. தவறான புரிதல் காரணத்தால் ப்ரீ-பெய்டு மின்மீட்டர் திட்டத்தை உறுப்பினர்கள் எதிர்க்கின்றார்கள். நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் ப்ரீ-பெய்டு மின்மீட்டர் திட்டம் கொண்டுவரப்படும்" என மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்தார்.
'கடந்த ஆட்சியில் சீனாவில் இருந்து டிஜிட்டல் மீட்டர் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. எனவே ஊழல் மீது விசாரணை நடத்த வேண்டும்' என சில சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், "மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டம் கொண்டு வரப்படும்" என்றார். அதையடுத்து ப்ரீ-பெய்டு மின்மீட்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.